Friday, 4 August 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 8

                         

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 8
[2. மனையறம் படுத்த காதை ]
-----------------------------------------
சொல்லற்கரிய சிறப்பும்    
மன்னரே விரும்பும் செல்வமுமுடையது.
போக பூமி என விளங்கும்  பூம்புகார்.
வணிகர்  நிறைந்து வளம் சிறந்து,
முழங்கும்  கடல் சூழ்ந்த உலகம்  
ஒரு சேரத் திரண்டு வந்தாலும் ,
வழங்கப்பின் வாங்காத வளமுடையது
அரும் பொருள் தரும் புதுமை நாடுகள்
ஒன்றுகூடித்திரண்டு கடல்வழியும்
தரைவழியுமாக  ஈட்டிய செல்வம்
குவிந்திருந்தன நகரெங்கும்;
குலப்பெருமை குன்றாத செறிந்த
செல்வக்குலத்தோர் , அச்செல்வத்தின்
பயனான ஈகைத் தவம் செய்வோர்
தானப் பயன் தரும் போகபூமியினர்.

பெருமலர்க் கண்ணி கண்ணகியும்,
காதல் கணவன் கோவலனும்
ஏழு அடுக்கு மாளிகையில் இடைப்பட்ட
நான்காம் அடுக்கில், மயனால் செய்து போன்ற,
மணிகள் இழைத்த கால்களையுடைய
கட்டிலின்மீது மகிழ்ந்திருந்தனர்.

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரை
வயற்பூ வாசம் நுகர்ந்து; அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக்
சண்பகக்காவில் மாலை போலப் பூத்திருக்கும்
மாதவி மலர், எனப் பலமலர்களின்
தாதினை ஆராய்ந்து உண்டு;
ஒளிவீசும் முகமுடைய மகளிரின்
சுருண்ட கருங்கூந்தலின்  
மணத்தைப் பெறுவதற்கு ஏங்கி

வழிகாணாது திரியும் வண்டுகளுடனும்
மணிக்கோவையால்  ஒழுங்கு வரிசையில் 
அமைத்த எழில் சாளரத்தின் ஊடே
குறுகிய புழைகளில் நுழைந்த 
மணத்தென்றலைக் கண்டு,
காதல் மிகுந்து , எழுநிலை மாடத்தின்
இடைநிலம்  நீங்கிமலர்க்கணையுடன்
காமன் வீற்றிருக்கும் நிலா முற்றமான

ஏழாவது மாடிக்குச் சென்றனர். .[தொடரும்]

Thursday, 3 August 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7
மாநகர்க்கு அறிவித்த  திருமணம்

ஏற்றினர் மங்கல மங்கையரை,
யானை மீது நகரெங்கும் சுற்றித் 
திருமணச்செய்தி அறிவிக்க.
வந்தது திருமண நாள்.
ஒலித்தன முரசுகள்,
ஆர்த்தன மத்தளங்கள்;
முழங்கின சங்குகள் முறையே.
வெண்குடைகள் எழுந்தன 
வேந்தன் உலா வந்தது போல்.
ஊர்வலத்தில் தொடர்ந்தது மங்கல நாண்

   மாலைகள் தொங்கும் மண்டப உச்சியின் 
கீழே நீலப்பட்டினாலான விதானத்தின் 
அடியில் ஓர் முத்துப்பந்தலில் 
வானத்துச் சந்திரன் உரோகிணி 
நட்சத்திரத்தைச் சேரும் நல்ல நாளில் 
அருந்ததிக்கு நிகரான கண்ணகியோடு  
கைகோர்த்து முதிய அந்தணன் 
வேதநெறிச் சடங்குகள் நிகழ்த்த   
மணந்து தீயினை வலம் வந்த
காட்சியைக் கண்டோர் கண்கள் 
என்ன தவம் செய்தனவோ!  
அழகு மேனி மகளிர் நறுமணப் பொருள் ஏந்திவர 
மலர் ஏந்திய மங்கையர் தொடர 
கூச்சப் பார்வையோடு கோதையர் ,
நிமிர்ந்த கொங்கையர், சாந்து ஏந்தினோர் 
அகிற்புகை ஏந்தியோர், மாலை ஏந்தியோர்,
சுண்ணப்பொடி சுமந்தோர்,
அரும்பிய முறுவலுடன் விளக்கேந்தினோர் 
அணிகலன் ஏந்தினார்,
முளைப்பாலிகை ஏந்தினோர்,
பூரண கும்பம் சுமந்தோர் தொடர்ந்து வர 
பொற்கொடி போன்றோர் 
பொழுதோடு மலர்ந்த மலரணிந்த 
விரிகூந்தல் மகளிர் வாழ்த்தினர்;
"இவள் காதலனைப் பிரியாமல்,
இணைந்த கை  நெகிழாமல்
தீமை அற்று இருவரும்  நீடு வாழ்கவென 
வாழ்த்தி கண்ணகியை மங்கலப் 
படுக்கையில் ஏற்றினர்.
உடன் மன்னனையும் வாழ்த்தினர்;
சினம் பொங்கும் வீர வேல் ஏந்தி 
இமையத்துக்கு இப்பால் தன் 
புலிச்சின்னம் நட்டு எதிரிலா 
ஆணைச்சக்கரத்தை உருட்டும் 
எங்கள் செம்பியன் வாழ்கவென.[தொடரும்]







Monday, 10 July 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6
-------------------------------------------------
புகார்க் காண்டம்
---------------------------------------
1. மங்கல வாழ்த்துப் பாடல்
-------------------------------------------------
போற்றுவோம் வெண்ணிலவை;
போற்றுவோம் வெண்ணிலவை
பூந்தாது சிந்தும் மலர்மாலை அணிந்த    மன்னனின்
குளிர் வெண்குடை போல் ,அழகிய உலகைக்
கருணையோடு காப்பதால் ,
போற்றுவோம் கதிரவனை; போற்றுவோம் கதிரவனை
காவிரிநாடனின் ஆணைச் சக்கரமாய்
பொன்சுடர் வீசும்  மேருமலைச் சிகரத்தை
வலம்  வந்து  உலகைச் சுற்றிவருவதால்
போற்றுவோம் மாண்புள்ள  மழையை :
போற்றுவோம் மாண்புள்ள  மழையை
அச்சுறுத்தும் கடல் சூழ்ந்த உலகை
சோழனின் கருணை போல்
சூழ்ந்து நின்று பெய்து காப்பதால்
போற்றுவோம் பூம்புகாரை;
போற்றுவோம் பூம்புகாரை;
பெருகும் நீர்வேலியாகி  நின்று
உலகைக்காக்கும் கடல் போல்
சோழன் குலத்தோடு புகழ்
ஓங்கி விளங்கி வருவதால்

 பொதிகையே ஆனாலும் இமயமே  ஆனாலும்
போவதை நீக்கி நகர் துறந்து அறியாத
பழங்குடி மாந்தர் வாழும்
பொதுமைவுணர்வுள்ள புகார் நகரே ஆயினும்
அழிவற்ற நிலைபேறு உள்ளவை அவையென நிறுவி
மறுப்போ  மாறுதலோ கூறார்
முடிந்த மெய்யுணர்வை முழுவதும் அறிந்த உயர்ந்தோர்;
ஆகவே,
நாகலோகத்துத் தலைநகரொடும், நாகநாட்டோடும்
நிகரான போகமும், நெடிய புகழும் கொண்ட புகார் நகரில்,
வான் மழை போன்ற வள்ளன்மை கொண்ட மாநாய்கன்
குலக்கொம்பின் அருளினால் தோன்றிய கொடி போன்றவள்
பன்னிரண்டாண்டு வயதுள்ளவள் குறைவில்லா அழகுள்ள
திருமகளின் புகழ்மிக்க வடிவுள்ளவள் என்றும்
தீமையற்ற அருந்ததியின் கற்பு த்திறன் இவள் திறன் என்றும்
புகாரின் பெண்மக்கள் போற்றும்,   பெருங்குணத்தை விரும்புகிற
கண்ணகி என்னும் பெயர்கொண்டவள்  ;

செந்தாமரையில் வீற்றுள்ள லக்ஷ்மியின் புகழ் மிக்க
வடிவம் கொண்டவள் என்றும்
தீமையற்ற  அருந்ததி  நட்சத்திரத்தின் ஆற்றல் இவள் ஆற்றல் என்றும்
புகாரின்  மக்கள் தொழுது போற்றும்
விரும்பத்தக்க உயர்ந்த குணங்களை நேசிப்பவள்
கண்ணகி என்ற பெயர் கொண்டவள் என்பவளுக்கும்

பெரு நிலம் முழுவதையும்  ஆளுகின்ற மாமன்னன்
தலைமைக்குடிகள் என்று ஒதுக்கி வைத்த
ஒரு தனிச்சிறப்புள்ள  குடிகளோடு உயர்ந்து
ஓங்கி வளரும் செல்வவளம் பெற்றவனும் ,
வருகின்ற செல்வத்தையெல்லாம் பிறர்க்கு வழங்குவோனும்,
சங்க நிதி, பதும நிதி என்ற  இருநிதியுமுடையோனான
 மாசாத்துவான் என்பவனின் மகனும், பதினெட்டு வயதுள்ளவனும்,;

பூமியைத் தேய்க்கும் புகழ் கொண்டவனும்
இசைவென்ற சொல்லினோரும்
நிலவுமதி முகமுமுள்ள பெண்களின்
பெண்களின் கூட்டத்தில் நம் கண்கள் கா ணும்
முருகன் என்று புகழ்ந்து அவனைக்
காதலோடு  போற்றும் சிறப்புடைய
கோவலன் என்ற பெயர் கொண்டவனுக்கும்

ஒரு நல்ல நாளில் திருமணம் செய்விப்பது என்று
இரு குடும்பத்தலைவரும் மகிழ்ச்சியோடு முடிவெடுத்து
மங்கலம் கூறும் மகளிரை யானை மீதேற்றி
மாநகருக்குச் செய்தி அறிவித்தனர் 

Thursday, 6 July 2017

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5
-------------------------------------------------------------------
உரைபெறு கட்டுரை
--------------------------------------------------
பாண்டிய நாடு கண்ணகியால் 
எரிக்கப்பட்ட அன்று முதல் 
மழை வளம் குன்றி 
வறுமையுற்றது , வெப்பு நோயும் 
கொப்புளமும் மக்களைத் தொடந்தன,
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்,
பொற்கொல்லர் ஆயிரம் பேரைக் கொன்று 
கண்ணகிக்குக்களப்பூசை செய்து 
விழா எடுத்து சாந்தி செய்ய,
நாடு நிரம்பிய  மழை பெய்தது;
நோயும், துன்பமும் நீங்கியது 

 அது கேட்டறிந்து கொங்கு மண்டலத்து 
 இளங்கோக்களான கோசர்கள் 
 தம் நாட்டிலும் கண்ணகிக்கு 
 விழா எடுத்து சாந்தி செய்ய
 பெய்யும் மழையும்,தொழிலும் 
 மாறாதாயின. 

அது அறிந்த  கடல் சூழ்ந்த  இலங்கையின் 
மன்னன் கயவாகு கண்ணகிக்கு
நாள் தோறும் வழிபாடு காண 
பலிபீடம் உள்ள கோயில் அமைத்து
'துன்பம் துடைத்து கோரிய 
வரம் தருபவள் இவள்' என
உறுதி கூறி ஒவ்வோர் ஆண்டும் 
ஆடி மாதத்தில் அங்கே ஒரு   
பெரு விழாவினை பலமுறை எடுப்பித்தான்.
அங்கு மழை நிலைத்து நின்று பெய்தது; 
பல வளங்கள் பெருகி(இலங்கை)
தவறாத விளைச்சல் உள்ள நாடானது 

அதைக் கேள்வியுற்று சோழன் பெருங்கிள்ளி
உறையூர்அரசவையில் 'எவ்வகையாலும் வரம் தரும் 
இவள் ஒரு பத்தினிக் கடவுள் ' என்று அறிவித்து 
கண்ணகிக்குப் பத்தினிக் கோயில் அமைத்து 
நாள்தோறும் விழாவும், பூசையும் நிகழச்செய்தான் 



Monday, 3 July 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4
(கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ)
அரசியலில்  நெறி தவறியோர்க்கு 
அறமே உயிர் நீக்கும் எமனாவதையும் 
புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தோர் போற்றுதலும்,
முன்செய்த வினையின் பயன்  பின்பிறவியில்  
சினத்துடன் வந்து சேரும் என்பதையும் 
இணைத்து வினைவந்து சேர்வதற்கு 
சிலம்பே காரணம் ஆவதால் 
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் 
யாம் பாட்டுடைய ஓர் செய்யுளைப் 
படைப்போம் என்றார்.
இக்காதை முடிமன்னர் 
சேர,சோழ, பாண்டியர் மூவர்க்கும் உரியது.
அடிகளே! நீங்களே அதைச் செய்தருளுக என்றார்.(சாத்தனார்)
..... அதற்கு அடிகளார் 


மங்கல வாழ்த்துப் பாடல், 
பெற்றோர் குடும்ப வாழ்வு நடத்தவிட்ட 
மனையறம்  படுத்த காதை
 நடன மங்கை மாதவி 
நடித்த அரங்கேற்று காதை,
அடுத்து அந்தி மாலைச் சிறப்புச் செய்த  காதை,
பூம்புகார் நகரில்  இந்திர விழா எடுத்த காதை
கடல் ஆடு காதை,
பூவிதழ் மலர்ந்த கடற்கரையில் பாடிய  கானல் வரி
 வேனில் காலம் வந்து பிரிவுத்துயரால் 
மாதவி துயருற்ற மாதவி இரங்கிய வேனிற் காதை
தீமை உடைய கனாத் திறம் உரைத்த காதை
பிறரை என்னென்ன என்ற  வினவச்செய்யும் 
நாடு காண் காதை,
அடுத்து காடு காண் காதை,
பின்னர் வேட்டுவ வரி
அடுத்து இதழ் விரிந்த மலர் சூடிய கண்ணகியை,
புறஞ்சேரியில் விட்டுச்சென்ற புறஞ்சேரி இறுத்த காதை
அடுத்து முழங்கும் இசையுள்ள 
ஊர் காண் காதை
அடுத்து அடைக்கலக் காதை
கொலைக்களக் காதை,
ஆய்ச்சியர் குரவை
தீமை நேரக்கேட்ட 
துன்ப மாலை
 நண்பகலையே  நடுங்கச்செய்த 
ஊர் சூழ் வரி
தொடர்ந்து சீர்மிக்க மன்னனோடு 
வழக்குரைத்த வழக்குரை காதை
 வஞ்சின மாலை , அடுத்து மதுரை மாநகர் 
தீக்கிரையான அழல் படு காதை
அதன் பின்னர் , அரும் தெய்வம் தோன்றிக்
கண்ணகியோடு உரையாடிய 
கட்டுரை காதையும்
பின்னர் அரும்பு அவிழ்ந்த 
மலர் சூடிய பெண்கள் நிகழ்த்திய 
குன்றக் குரவையும் என்று
இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து,  பின்னர்  வரம் தரு காதையோடு 
முப்பது காதைகளோடு 

இடையில் உரை வர  பாட்டு உடைச் செய்யுளை 
சொல்லிற் சிறப்புள்ள இளங்கோ அடிகள் அருள
மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் கேட்டார் 
இது, பகுப்பின் முறை  தெரிந்த பதிகத்தின் மரபு என்பர் 

Friday, 30 June 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-3

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-3
------------------------------------------------------------------
செய்த முன் வினைக்கு விளைவு வரும்
காலம் நேர்ந்ததால் எதையும் ஆராயாதவனாகி 
விரிந்த வேப்பம்பூ மாலையணிந்த பாண்டிய மன்னன்
அடிமைச்சேவகரைக் கூவியழைத்து
“அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பைக்
கொணர்க இங்கு”என்றான்.
பின்கொலைக்களத்தில் கொலையுண்டு
வீழ்ந்த கோவலன் மனைவி
புகலிடம் இல்லாதவளாகி , நெடுங் கண்ணில் நீர் சொரிந்தாள் ,
அவள்பத்தினி ஆகவே , பாண்டியன் கேடு பெற ,
முத்தாரம் அணிந்த மார்பின் ஒரு முலைமுகத்தைத் திருகி,
நிலைபேருள்ள கூடல் நகர்மேல் எறி ந்து
நெடுந்தீ ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும்
இவள்’ என்றார் சாத்தனார் -
வினை விளையும் காலம் என்றீர்களே
எது அவர்கள் வினையின் விளைவு
என்று இளங்கோ கேட்க
"வீரப்பெருந்தகையே! கேளுங்கள்
குன்றாச்சிறப்புள்ள மதுரை மூதூரில்
கொன்றைமாலை அணிந்த சடைமுடியார்
கோயில் முற்றத்தில் வெள்ளியம்பலத்தில்
நள்ளிரவில் நான் படுத்திருந்தேன்;
அப்போது ஆறாத்துயர் கொண்ட
வீர மாபத்தினி கண்ணகி முன்னர்
மதுரையின் மாதேவி தோன்றி
கொதிக்கும் தணல் சீற்றத்தை
பிய்த்து எறிந்த முலையால் தோற்றுவித்தவளே,
உங்கள் நல்வினைப்பயன் முடிந்தது ;
முந்திய பிறவியில் பைந்தொடியாளே
சிதையாச் சிறப்புள்ள சிங்கபுரத்துச் சங்கமன்
என்னும் வாணிகன் மனைவி உனக்கு
இட்ட சாபம் வந்து கூடியது; எனவே
நீண்டு தழைத்த கூந்தல் உடையோளே!
உன் கணவனைப் பதினான்கு நாள் கடந்து
வானோர் வடிவில் அன்றி இங்குள்ளோர்
வடிவில் காண்பதற்கில்லை என்றது
அக்குற்றமில்லாச் சொற்களை நான் கேட்டேன்
என்றார் சாத்தனார்

Thursday, 29 June 2017

சிலப்பதிகாரம் புதுக்கவிதை வடிவில்-2

சிலப்பதிகாரம் புதுக்கவிதை வடிவில்-2 
------------------------------------------------------------------
ஆத்தி மாலை சூடிய சோழனின் 
நீங்காத சிறப்பினை உடைய 
மூதூராம் புகார் நகரில் வாழ்ந்த 
கோவலன் என்றோர் வாணிகன் அந்நகரில்
நாடகத்தால் புகழ் பெற்ற 
நாடகப் பொதுமகளாகிய மாதவியோடு 
உறவு கொண்டுப்பழகிய வகையில் 
அரிதாக ஈட்டிய பொருளை எல்லாம் 
இழந்ததன் காரணமாக கண்ணகி எனப்படும் 
மனைவியோடு இசைபாடும் அவளது 
காற்சிலம்பை விற்க வேண்டி 
பாடற்  சிறப்புடைய பாண்டியனின் 
பெரும்புகழ் பெற்ற மாடமதுரையில் நுழைந்தான்.
மக்கள் போற்றும் வணிகவீதியில் அச்சிலம்பைக்
கையில் ஏந்திசென்றவன்,
பொன்செய்யும் கொல்லனிடம் காட்ட,
"அரசி கோப்பெருந்தேவிக்கு அன்றி இச்சிலம்பை 
அணியும் தகுதி பிறர்க்கில்லை" என்று 
அதைத் தன்  கையில் வாங்கி,
முன்பு தான் களவாடி. 
தொலைந்தது என்று  மன்னனிடம் 
மறைத்து விட்ட  சித்திர வேலைப்பாடுள்ள 
சிலம்பைக் "கண்டேன் ஒரு கள்வன் கையில்"  என 
மன்னனை அணுகிக்கூற [தொடரும்]

Tuesday, 27 June 2017

சிலப்பதிகாரம் -புதுக்கவிதை வடிவில் .1

சிலப்பதிகாரம் -புதுக்கவிதை வடிவில் .1
-------------------------------


நான்  சிலப்பதிகாரத்தை  நாவல் வடிவில்எழுதும்முயற்சி தொடங்கி சிறிது காலமாயிற்று. அதற்கு முன்னர்  இக்காப்பியத்தை யாவரும் எளிதில் சிரமப்படாது உரையின் துணையின்றி  அறியும் வண்ணம் எளிய தமிழில்  சுவைக்க வேண்டுமென்று, புதுக்கவிதை ஆக்குவது முன்னோட்டமாக இருக்கும் என்ற கருத்தில் 
காப்பியம் முழுவதையும் எளிய கவிதை வடிவாக்குகிறேன் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்ற என் பணிவான வேண்டுகோளை மதித்து வந்த பதில்கள் சில:-  
*பிற மொழிகளில் செவ்விலக்கியங்களை எளிய, அன்றாட மொழியில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஏராளம்.குறிப்பாக, பழைய எழுத்து பாணியை புரிந்துகொள்ள இயலாத அல்லது சிரமப்படுகிற வர்களுக்கு, இளைய தலைமுறையினருக்கு அது ஒரு படிக்கல். அதன் வழியாக அவர்கள் அந்தந்த மூல நூலை  அடுத்த கட்டமாக சென்றடைய முடியும்.
அந்த வகையில் சிலப்பதிகாரத்தை எளிய, புதுக் கவிதை நடையில் அறிமுகப்படுத்துவது போற்றப்படும்
 *முயற்சியாக இருக்கும்.வாழ்த்துக்களும் வழித்துணையும்.செய்யுங்கள் ஐயா!நான் மிக ஆவலாய் எதிர் நோக்குகிறேன்.ஆனாலும் அது சவாலான பணிதான்.வாசிப்பவர் ஒவ்வொருவரும் மூலப் படைப்புடன் ஒப்புநோக்கி கருத்துச் சொல்வார்கள்.மனந்தளர்ந்து விடாதிருக்க வேண்டும்.அதுசரி.இதை நான் போய் உங்களுக்குச் சொல்வதா?படைப்புத்துறையில் பொன்விழா காண்கிறீர்கள்.தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!
*நல்ல முயற்சி. தொடங்குங்கள்
 *சிலப்பதிகாரத்தை எளிய நடைமுறை தமிழில் தற்கால உவமானங்களுடன் உடைய விளக்கங்களை படிக்க ஆவல். பத்திரிகையில்  வரும் கவிதைகளை படித்து படித்து ஒவ்வாமை எற்பட்டுள்ளது"
கருத்துக்கக்கும்,அனைவருக்கும்  இதய பூர்வமான சிநேக நன்றி கூறி வணங்குகிறேன். 
ஒரு வாக்குமூலம்.
------------------------------------
என் முயற்சி ஒரு எளிய தொடக்கமே ! மாபெரும் புலவோரும் , மகா பண்டிதர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகில்  குற்றங்குறைகள் காணக்கூடியதே! நோக்கம் மிக எளியது.நேர்மையானது . காப்பியங்களை, எளிய தமிழறிவு மட்டுமே உள்ளோரிடம் , அவர்கள் கைக்குக்கிடைக்கச்செய்யவேண்டும். அமுதத்தேன் கூடத்தில் ஓரிரு தேன்துளியாவது தமிழறிந்த அனைவரும் பருக வழிசமைத்தலே.
------------------------------------------------------------------------------------------------------------------------
                         பதிகம் 
                     -----------------
அரசு வேண்டாமென மறுத்தவர்,  
சேர இளவரசர் இளங்கோ .
அருகர் கோயில் குணவாயிலில்  
அவர்அமர்ந்திருந்தபோது 
குன்றில் வாழும் குறவர்கள்  
ஒன்று கூடிவந்து 
கூறினர்  ஒரு செய்தி
"பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில், 
அதன் குளிர்நிழலில் நின்றாள் 
ஒரு முலை இழந்த திருமாபத்தினி ;
வானிலிருந்து இறங்கிய 
அமரர்கோனின் அவையினர் 
அவளது கணவனை அவளுக்குக்  காட்டவும்
அவனுடன்எங்கள் கண்முன்னே அவள் விண்ணகம் 
சென்றதைக் கண்டு வியந்தோம்" என்றனர். 
அவரோடு இருந்த குளிர்தமிழ்கூறும்  சாத்தனார் 
நான் அறிவேன் அது ஏன் நேர்ந்ததென 
உரைக்கத்தொடங்கினார் [தொடரும்]
------------------------------------------ 
மூலம் 

சிலப்பதிகாரம்

பதிகம்
(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீஎன-
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

யான் அறிகுவன் அது பட்டதுஎன்று உரைப்போன்,
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க‘ - என்று ஏகி
பண்டு தான் கொண்ட சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கைஎன
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், ‘அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு‘ - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்என-
வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?’ என்ன - விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்என 60

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,

அடிகள்! நீரே அருளுகஎன்றாற்கு அவர்,

’-இதன் நாவல் வடிவினை அடுத்து காண்க
0