Sunday, 17 May 2020

சிலப்பதிகாரம் -[நாவல் வடிவில்]1


சிலப்பதிகாரம் -1
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாட்டுக்கும்,தமிழ்த்தாய்க்கும் இளங்கோவடிகளுக்கும் மனமார்ந்த நன்றியுடன்  கைகூப்பி வணங்கித் தொடங்குகிறேன்.
சிலப்பதிகாரம் நாவல் தொடக்கம் தள்ளித் தள்ளிப் போனது.அதன் புதுக்கவிதை வடிவம் தற்போது அவசியமில்லை என்று கருதியதால் நேரடியாக நாவலைத் தொடங்குகிறேன்.
1
 _______________________________________________________________________

கொல்லப்பட்ட கோவலன் மனைவி  கண்ணகி  புகலிடம் இல்லாதவள் ஆனாள். கண்களில் நீர் பெருகி பாண்டியனை உயிர் துறக்கச் செய்தாள்; முத்தாரம் அணிந்த மார்பின் முலை முகத்தைத் திருகி எரிந்தாள் அதிலிருந்து பெருநெருப்பு தோன்றியது. அதனால்  மதுரை பற்றி எரிந்தது."என்றார் கூலவாணிகன்  சாத்தனார்.

அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டார் சேர நாட்டின் அரசுரிமையைத் துறந்திருந்த  இளங்கோவடிகள், "சற்றுப்பொறுங்கள். தொடங்கும்போது "வினை, பயனைத் தரும் காலம் என்றீர்களே! அவர்களின் வினைப் பயன் தான் யாது?” என்று கேட்டார்.
"மதுரை மூதூரில், வெள்ளியம்பலத்தில், இருள் செறிந்த நள்ளிரவில் உறங்கப்படுத்திருந்தேன்.. அப்பொழுது ஆறாத் துயருற்ற வீரபத்தினியின் முன்னால் , மதுரையின்  காவல் தெய்வம்  மதுராபதித் தெய்வம் வெளிப்பட்டுத் தோன்றியது."
 சாத்தனார் கூறினார்
 "தோன்றியதா? நீங்கள் பார்த்தீர்களா?"
"ஆம். கண்முன் பார்த்தேன்."
"பிறகு என்ன நடந்தது?"
  மிக்க சினத்தால், கொதிக்கும் அழலை உனது கொங்கையின் மூலம் தோற்றுவித்தாய்! உங்களது நல்வினைப் பயன் முடிந்தது. அது உன் ஆற்றலால் அல்ல. முற்பிறப்பில் ஒரு நல்ல மனைவி உன் கணவனுக்கு  இட்ட சாபம்! எல்லாம் முடிந்தது. இதோ இங்கே  இருப்பவர்கள் போல இனி அவனை மனித வடிவிலே காணவியலாது!"
"பிறகு நான் அவரை எப்போது காண்பது? என்று கண்ணகி கேட்டாள்.
" இன்றைக்குப் பதிநான்காம் நாள் பகற்பொழுது கழிந்ததும் வானவர் வடிவில் காண்பாய்! " என்றது.
"அதை நீங்களும் கேட்டீர்களா? என்று இளங்கோவடிகள் சாத்தனாரை உற்றுப்பார்த்தவண்ணம் கேட்டார்.
"ஆம்!அதை நானும் கேட்டேன்! என்றார் சாத்தனார் .
"சாத்தனாரே! சிந்திக்கச் சிந்திக்க எனக்கு இதில் மூன்று உண்மைகள் புலப்படுகின்றன" என்றார் இளங்கோவடிகள்.
"கூறுங்கள் அடிகளாரே"
"அரசாட்சியில் அரசன் சிறிது பிழை செய்தாலும் அவனுக்கு அறக்கடவுளே எமனாகும் இது முதல் உண்மை. புகழ்மிக்க பத்தினியை மனிதர் மட்டுமல்ல  முனிவரும் தேவரும் போற்றுவர்.இது இரண்டாவது உண்மை. முன் செய்த தீவினை, சினந்து வந்து தவறாது உரிய விளைவைத் தரும். இது மூன்றாவது உண்மை"என்றார்.
சாத்தனாரின் முகம் தனி ஒளியால் விரிந்தது
"இது ஒரு சிலம்பினால் விளைந்தது. அந்தக்கதை  சிலம்பின் அதிகாரம். .இந்தக்கதையை ஒரு காப்பியமாக்கலாம்"
சாத்தனாரின் முகம் மேலும் மலர்ந்தது
"புகாரில் பிறந்து, மதுரையிலே சினந்து சேர நாட்டிலே தெய்வமானவள் கண்ணகி.  அவள்.மூன்று நாடுகளுக்கும் உரியவள்.அவளது கதையை மூன்று நாட்டினர்க்கும் பொதுவுடைமையாக்கி மூன்று உண்மைகளையும் நிலை நாட்டுவோம்  " என்றார்  இளங்கோவடிகள்.
அது கேட்டு மகிழ்ந்த சாத்தனார், “இது தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது. ஆதலின், அடிகளே, நீரே இதனை அருளிச் செய்வீராக!என வேண்டிக் கொண்டார். [காப்பியம் தொடர நாவலும் தொடரும்]


No comments:

Post a Comment