Sunday 17 May 2020

சிலப்பதிகாரம் -[நாவல் வடிவில்]1


சிலப்பதிகாரம் -1
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாட்டுக்கும்,தமிழ்த்தாய்க்கும் இளங்கோவடிகளுக்கும் மனமார்ந்த நன்றியுடன்  கைகூப்பி வணங்கித் தொடங்குகிறேன்.
சிலப்பதிகாரம் நாவல் தொடக்கம் தள்ளித் தள்ளிப் போனது.அதன் புதுக்கவிதை வடிவம் தற்போது அவசியமில்லை என்று கருதியதால் நேரடியாக நாவலைத் தொடங்குகிறேன்.
1
 _______________________________________________________________________

கொல்லப்பட்ட கோவலன் மனைவி  கண்ணகி  புகலிடம் இல்லாதவள் ஆனாள். கண்களில் நீர் பெருகி பாண்டியனை உயிர் துறக்கச் செய்தாள்; முத்தாரம் அணிந்த மார்பின் முலை முகத்தைத் திருகி எரிந்தாள் அதிலிருந்து பெருநெருப்பு தோன்றியது. அதனால்  மதுரை பற்றி எரிந்தது."என்றார் கூலவாணிகன்  சாத்தனார்.

அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டார் சேர நாட்டின் அரசுரிமையைத் துறந்திருந்த  இளங்கோவடிகள், "சற்றுப்பொறுங்கள். தொடங்கும்போது "வினை, பயனைத் தரும் காலம் என்றீர்களே! அவர்களின் வினைப் பயன் தான் யாது?” என்று கேட்டார்.
"மதுரை மூதூரில், வெள்ளியம்பலத்தில், இருள் செறிந்த நள்ளிரவில் உறங்கப்படுத்திருந்தேன்.. அப்பொழுது ஆறாத் துயருற்ற வீரபத்தினியின் முன்னால் , மதுரையின்  காவல் தெய்வம்  மதுராபதித் தெய்வம் வெளிப்பட்டுத் தோன்றியது."
 சாத்தனார் கூறினார்
 "தோன்றியதா? நீங்கள் பார்த்தீர்களா?"
"ஆம். கண்முன் பார்த்தேன்."
"பிறகு என்ன நடந்தது?"
  மிக்க சினத்தால், கொதிக்கும் அழலை உனது கொங்கையின் மூலம் தோற்றுவித்தாய்! உங்களது நல்வினைப் பயன் முடிந்தது. அது உன் ஆற்றலால் அல்ல. முற்பிறப்பில் ஒரு நல்ல மனைவி உன் கணவனுக்கு  இட்ட சாபம்! எல்லாம் முடிந்தது. இதோ இங்கே  இருப்பவர்கள் போல இனி அவனை மனித வடிவிலே காணவியலாது!"
"பிறகு நான் அவரை எப்போது காண்பது? என்று கண்ணகி கேட்டாள்.
" இன்றைக்குப் பதிநான்காம் நாள் பகற்பொழுது கழிந்ததும் வானவர் வடிவில் காண்பாய்! " என்றது.
"அதை நீங்களும் கேட்டீர்களா? என்று இளங்கோவடிகள் சாத்தனாரை உற்றுப்பார்த்தவண்ணம் கேட்டார்.
"ஆம்!அதை நானும் கேட்டேன்! என்றார் சாத்தனார் .
"சாத்தனாரே! சிந்திக்கச் சிந்திக்க எனக்கு இதில் மூன்று உண்மைகள் புலப்படுகின்றன" என்றார் இளங்கோவடிகள்.
"கூறுங்கள் அடிகளாரே"
"அரசாட்சியில் அரசன் சிறிது பிழை செய்தாலும் அவனுக்கு அறக்கடவுளே எமனாகும் இது முதல் உண்மை. புகழ்மிக்க பத்தினியை மனிதர் மட்டுமல்ல  முனிவரும் தேவரும் போற்றுவர்.இது இரண்டாவது உண்மை. முன் செய்த தீவினை, சினந்து வந்து தவறாது உரிய விளைவைத் தரும். இது மூன்றாவது உண்மை"என்றார்.
சாத்தனாரின் முகம் தனி ஒளியால் விரிந்தது
"இது ஒரு சிலம்பினால் விளைந்தது. அந்தக்கதை  சிலம்பின் அதிகாரம். .இந்தக்கதையை ஒரு காப்பியமாக்கலாம்"
சாத்தனாரின் முகம் மேலும் மலர்ந்தது
"புகாரில் பிறந்து, மதுரையிலே சினந்து சேர நாட்டிலே தெய்வமானவள் கண்ணகி.  அவள்.மூன்று நாடுகளுக்கும் உரியவள்.அவளது கதையை மூன்று நாட்டினர்க்கும் பொதுவுடைமையாக்கி மூன்று உண்மைகளையும் நிலை நாட்டுவோம்  " என்றார்  இளங்கோவடிகள்.
அது கேட்டு மகிழ்ந்த சாத்தனார், “இது தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது. ஆதலின், அடிகளே, நீரே இதனை அருளிச் செய்வீராக!என வேண்டிக் கொண்டார். [காப்பியம் தொடர நாவலும் தொடரும்]


Friday 4 August 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 8

                         

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 8
[2. மனையறம் படுத்த காதை ]
-----------------------------------------
சொல்லற்கரிய சிறப்பும்    
மன்னரே விரும்பும் செல்வமுமுடையது.
போக பூமி என விளங்கும்  பூம்புகார்.
வணிகர்  நிறைந்து வளம் சிறந்து,
முழங்கும்  கடல் சூழ்ந்த உலகம்  
ஒரு சேரத் திரண்டு வந்தாலும் ,
வழங்கப்பின் வாங்காத வளமுடையது
அரும் பொருள் தரும் புதுமை நாடுகள்
ஒன்றுகூடித்திரண்டு கடல்வழியும்
தரைவழியுமாக  ஈட்டிய செல்வம்
குவிந்திருந்தன நகரெங்கும்;
குலப்பெருமை குன்றாத செறிந்த
செல்வக்குலத்தோர் , அச்செல்வத்தின்
பயனான ஈகைத் தவம் செய்வோர்
தானப் பயன் தரும் போகபூமியினர்.

பெருமலர்க் கண்ணி கண்ணகியும்,
காதல் கணவன் கோவலனும்
ஏழு அடுக்கு மாளிகையில் இடைப்பட்ட
நான்காம் அடுக்கில், மயனால் செய்து போன்ற,
மணிகள் இழைத்த கால்களையுடைய
கட்டிலின்மீது மகிழ்ந்திருந்தனர்.

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரை
வயற்பூ வாசம் நுகர்ந்து; அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக்
சண்பகக்காவில் மாலை போலப் பூத்திருக்கும்
மாதவி மலர், எனப் பலமலர்களின்
தாதினை ஆராய்ந்து உண்டு;
ஒளிவீசும் முகமுடைய மகளிரின்
சுருண்ட கருங்கூந்தலின்  
மணத்தைப் பெறுவதற்கு ஏங்கி

வழிகாணாது திரியும் வண்டுகளுடனும்
மணிக்கோவையால்  ஒழுங்கு வரிசையில் 
அமைத்த எழில் சாளரத்தின் ஊடே
குறுகிய புழைகளில் நுழைந்த 
மணத்தென்றலைக் கண்டு,
காதல் மிகுந்து , எழுநிலை மாடத்தின்
இடைநிலம்  நீங்கிமலர்க்கணையுடன்
காமன் வீற்றிருக்கும் நிலா முற்றமான

ஏழாவது மாடிக்குச் சென்றனர். .[தொடரும்]

Thursday 3 August 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7
மாநகர்க்கு அறிவித்த  திருமணம்

ஏற்றினர் மங்கல மங்கையரை,
யானை மீது நகரெங்கும் சுற்றித் 
திருமணச்செய்தி அறிவிக்க.
வந்தது திருமண நாள்.
ஒலித்தன முரசுகள்,
ஆர்த்தன மத்தளங்கள்;
முழங்கின சங்குகள் முறையே.
வெண்குடைகள் எழுந்தன 
வேந்தன் உலா வந்தது போல்.
ஊர்வலத்தில் தொடர்ந்தது மங்கல நாண்

   மாலைகள் தொங்கும் மண்டப உச்சியின் 
கீழே நீலப்பட்டினாலான விதானத்தின் 
அடியில் ஓர் முத்துப்பந்தலில் 
வானத்துச் சந்திரன் உரோகிணி 
நட்சத்திரத்தைச் சேரும் நல்ல நாளில் 
அருந்ததிக்கு நிகரான கண்ணகியோடு  
கைகோர்த்து முதிய அந்தணன் 
வேதநெறிச் சடங்குகள் நிகழ்த்த   
மணந்து தீயினை வலம் வந்த
காட்சியைக் கண்டோர் கண்கள் 
என்ன தவம் செய்தனவோ!  
அழகு மேனி மகளிர் நறுமணப் பொருள் ஏந்திவர 
மலர் ஏந்திய மங்கையர் தொடர 
கூச்சப் பார்வையோடு கோதையர் ,
நிமிர்ந்த கொங்கையர், சாந்து ஏந்தினோர் 
அகிற்புகை ஏந்தியோர், மாலை ஏந்தியோர்,
சுண்ணப்பொடி சுமந்தோர்,
அரும்பிய முறுவலுடன் விளக்கேந்தினோர் 
அணிகலன் ஏந்தினார்,
முளைப்பாலிகை ஏந்தினோர்,
பூரண கும்பம் சுமந்தோர் தொடர்ந்து வர 
பொற்கொடி போன்றோர் 
பொழுதோடு மலர்ந்த மலரணிந்த 
விரிகூந்தல் மகளிர் வாழ்த்தினர்;
"இவள் காதலனைப் பிரியாமல்,
இணைந்த கை  நெகிழாமல்
தீமை அற்று இருவரும்  நீடு வாழ்கவென 
வாழ்த்தி கண்ணகியை மங்கலப் 
படுக்கையில் ஏற்றினர்.
உடன் மன்னனையும் வாழ்த்தினர்;
சினம் பொங்கும் வீர வேல் ஏந்தி 
இமையத்துக்கு இப்பால் தன் 
புலிச்சின்னம் நட்டு எதிரிலா 
ஆணைச்சக்கரத்தை உருட்டும் 
எங்கள் செம்பியன் வாழ்கவென.[தொடரும்]







Monday 10 July 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6
-------------------------------------------------
புகார்க் காண்டம்
---------------------------------------
1. மங்கல வாழ்த்துப் பாடல்
-------------------------------------------------
போற்றுவோம் வெண்ணிலவை;
போற்றுவோம் வெண்ணிலவை
பூந்தாது சிந்தும் மலர்மாலை அணிந்த    மன்னனின்
குளிர் வெண்குடை போல் ,அழகிய உலகைக்
கருணையோடு காப்பதால் ,
போற்றுவோம் கதிரவனை; போற்றுவோம் கதிரவனை
காவிரிநாடனின் ஆணைச் சக்கரமாய்
பொன்சுடர் வீசும்  மேருமலைச் சிகரத்தை
வலம்  வந்து  உலகைச் சுற்றிவருவதால்
போற்றுவோம் மாண்புள்ள  மழையை :
போற்றுவோம் மாண்புள்ள  மழையை
அச்சுறுத்தும் கடல் சூழ்ந்த உலகை
சோழனின் கருணை போல்
சூழ்ந்து நின்று பெய்து காப்பதால்
போற்றுவோம் பூம்புகாரை;
போற்றுவோம் பூம்புகாரை;
பெருகும் நீர்வேலியாகி  நின்று
உலகைக்காக்கும் கடல் போல்
சோழன் குலத்தோடு புகழ்
ஓங்கி விளங்கி வருவதால்

 பொதிகையே ஆனாலும் இமயமே  ஆனாலும்
போவதை நீக்கி நகர் துறந்து அறியாத
பழங்குடி மாந்தர் வாழும்
பொதுமைவுணர்வுள்ள புகார் நகரே ஆயினும்
அழிவற்ற நிலைபேறு உள்ளவை அவையென நிறுவி
மறுப்போ  மாறுதலோ கூறார்
முடிந்த மெய்யுணர்வை முழுவதும் அறிந்த உயர்ந்தோர்;
ஆகவே,
நாகலோகத்துத் தலைநகரொடும், நாகநாட்டோடும்
நிகரான போகமும், நெடிய புகழும் கொண்ட புகார் நகரில்,
வான் மழை போன்ற வள்ளன்மை கொண்ட மாநாய்கன்
குலக்கொம்பின் அருளினால் தோன்றிய கொடி போன்றவள்
பன்னிரண்டாண்டு வயதுள்ளவள் குறைவில்லா அழகுள்ள
திருமகளின் புகழ்மிக்க வடிவுள்ளவள் என்றும்
தீமையற்ற அருந்ததியின் கற்பு த்திறன் இவள் திறன் என்றும்
புகாரின் பெண்மக்கள் போற்றும்,   பெருங்குணத்தை விரும்புகிற
கண்ணகி என்னும் பெயர்கொண்டவள்  ;

செந்தாமரையில் வீற்றுள்ள லக்ஷ்மியின் புகழ் மிக்க
வடிவம் கொண்டவள் என்றும்
தீமையற்ற  அருந்ததி  நட்சத்திரத்தின் ஆற்றல் இவள் ஆற்றல் என்றும்
புகாரின்  மக்கள் தொழுது போற்றும்
விரும்பத்தக்க உயர்ந்த குணங்களை நேசிப்பவள்
கண்ணகி என்ற பெயர் கொண்டவள் என்பவளுக்கும்

பெரு நிலம் முழுவதையும்  ஆளுகின்ற மாமன்னன்
தலைமைக்குடிகள் என்று ஒதுக்கி வைத்த
ஒரு தனிச்சிறப்புள்ள  குடிகளோடு உயர்ந்து
ஓங்கி வளரும் செல்வவளம் பெற்றவனும் ,
வருகின்ற செல்வத்தையெல்லாம் பிறர்க்கு வழங்குவோனும்,
சங்க நிதி, பதும நிதி என்ற  இருநிதியுமுடையோனான
 மாசாத்துவான் என்பவனின் மகனும், பதினெட்டு வயதுள்ளவனும்,;

பூமியைத் தேய்க்கும் புகழ் கொண்டவனும்
இசைவென்ற சொல்லினோரும்
நிலவுமதி முகமுமுள்ள பெண்களின்
பெண்களின் கூட்டத்தில் நம் கண்கள் கா ணும்
முருகன் என்று புகழ்ந்து அவனைக்
காதலோடு  போற்றும் சிறப்புடைய
கோவலன் என்ற பெயர் கொண்டவனுக்கும்

ஒரு நல்ல நாளில் திருமணம் செய்விப்பது என்று
இரு குடும்பத்தலைவரும் மகிழ்ச்சியோடு முடிவெடுத்து
மங்கலம் கூறும் மகளிரை யானை மீதேற்றி
மாநகருக்குச் செய்தி அறிவித்தனர் 

Thursday 6 July 2017

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5
-------------------------------------------------------------------
உரைபெறு கட்டுரை
--------------------------------------------------
பாண்டிய நாடு கண்ணகியால் 
எரிக்கப்பட்ட அன்று முதல் 
மழை வளம் குன்றி 
வறுமையுற்றது , வெப்பு நோயும் 
கொப்புளமும் மக்களைத் தொடந்தன,
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்,
பொற்கொல்லர் ஆயிரம் பேரைக் கொன்று 
கண்ணகிக்குக்களப்பூசை செய்து 
விழா எடுத்து சாந்தி செய்ய,
நாடு நிரம்பிய  மழை பெய்தது;
நோயும், துன்பமும் நீங்கியது 

 அது கேட்டறிந்து கொங்கு மண்டலத்து 
 இளங்கோக்களான கோசர்கள் 
 தம் நாட்டிலும் கண்ணகிக்கு 
 விழா எடுத்து சாந்தி செய்ய
 பெய்யும் மழையும்,தொழிலும் 
 மாறாதாயின. 

அது அறிந்த  கடல் சூழ்ந்த  இலங்கையின் 
மன்னன் கயவாகு கண்ணகிக்கு
நாள் தோறும் வழிபாடு காண 
பலிபீடம் உள்ள கோயில் அமைத்து
'துன்பம் துடைத்து கோரிய 
வரம் தருபவள் இவள்' என
உறுதி கூறி ஒவ்வோர் ஆண்டும் 
ஆடி மாதத்தில் அங்கே ஒரு   
பெரு விழாவினை பலமுறை எடுப்பித்தான்.
அங்கு மழை நிலைத்து நின்று பெய்தது; 
பல வளங்கள் பெருகி(இலங்கை)
தவறாத விளைச்சல் உள்ள நாடானது 

அதைக் கேள்வியுற்று சோழன் பெருங்கிள்ளி
உறையூர்அரசவையில் 'எவ்வகையாலும் வரம் தரும் 
இவள் ஒரு பத்தினிக் கடவுள் ' என்று அறிவித்து 
கண்ணகிக்குப் பத்தினிக் கோயில் அமைத்து 
நாள்தோறும் விழாவும், பூசையும் நிகழச்செய்தான் 



Monday 3 July 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4
(கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ)
அரசியலில்  நெறி தவறியோர்க்கு 
அறமே உயிர் நீக்கும் எமனாவதையும் 
புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தோர் போற்றுதலும்,
முன்செய்த வினையின் பயன்  பின்பிறவியில்  
சினத்துடன் வந்து சேரும் என்பதையும் 
இணைத்து வினைவந்து சேர்வதற்கு 
சிலம்பே காரணம் ஆவதால் 
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் 
யாம் பாட்டுடைய ஓர் செய்யுளைப் 
படைப்போம் என்றார்.
இக்காதை முடிமன்னர் 
சேர,சோழ, பாண்டியர் மூவர்க்கும் உரியது.
அடிகளே! நீங்களே அதைச் செய்தருளுக என்றார்.(சாத்தனார்)
..... அதற்கு அடிகளார் 


மங்கல வாழ்த்துப் பாடல், 
பெற்றோர் குடும்ப வாழ்வு நடத்தவிட்ட 
மனையறம்  படுத்த காதை
 நடன மங்கை மாதவி 
நடித்த அரங்கேற்று காதை,
அடுத்து அந்தி மாலைச் சிறப்புச் செய்த  காதை,
பூம்புகார் நகரில்  இந்திர விழா எடுத்த காதை
கடல் ஆடு காதை,
பூவிதழ் மலர்ந்த கடற்கரையில் பாடிய  கானல் வரி
 வேனில் காலம் வந்து பிரிவுத்துயரால் 
மாதவி துயருற்ற மாதவி இரங்கிய வேனிற் காதை
தீமை உடைய கனாத் திறம் உரைத்த காதை
பிறரை என்னென்ன என்ற  வினவச்செய்யும் 
நாடு காண் காதை,
அடுத்து காடு காண் காதை,
பின்னர் வேட்டுவ வரி
அடுத்து இதழ் விரிந்த மலர் சூடிய கண்ணகியை,
புறஞ்சேரியில் விட்டுச்சென்ற புறஞ்சேரி இறுத்த காதை
அடுத்து முழங்கும் இசையுள்ள 
ஊர் காண் காதை
அடுத்து அடைக்கலக் காதை
கொலைக்களக் காதை,
ஆய்ச்சியர் குரவை
தீமை நேரக்கேட்ட 
துன்ப மாலை
 நண்பகலையே  நடுங்கச்செய்த 
ஊர் சூழ் வரி
தொடர்ந்து சீர்மிக்க மன்னனோடு 
வழக்குரைத்த வழக்குரை காதை
 வஞ்சின மாலை , அடுத்து மதுரை மாநகர் 
தீக்கிரையான அழல் படு காதை
அதன் பின்னர் , அரும் தெய்வம் தோன்றிக்
கண்ணகியோடு உரையாடிய 
கட்டுரை காதையும்
பின்னர் அரும்பு அவிழ்ந்த 
மலர் சூடிய பெண்கள் நிகழ்த்திய 
குன்றக் குரவையும் என்று
இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து,  பின்னர்  வரம் தரு காதையோடு 
முப்பது காதைகளோடு 

இடையில் உரை வர  பாட்டு உடைச் செய்யுளை 
சொல்லிற் சிறப்புள்ள இளங்கோ அடிகள் அருள
மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் கேட்டார் 
இது, பகுப்பின் முறை  தெரிந்த பதிகத்தின் மரபு என்பர் 

Friday 30 June 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-3

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-3
------------------------------------------------------------------
செய்த முன் வினைக்கு விளைவு வரும்
காலம் நேர்ந்ததால் எதையும் ஆராயாதவனாகி 
விரிந்த வேப்பம்பூ மாலையணிந்த பாண்டிய மன்னன்
அடிமைச்சேவகரைக் கூவியழைத்து
“அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பைக்
கொணர்க இங்கு”என்றான்.
பின்கொலைக்களத்தில் கொலையுண்டு
வீழ்ந்த கோவலன் மனைவி
புகலிடம் இல்லாதவளாகி , நெடுங் கண்ணில் நீர் சொரிந்தாள் ,
அவள்பத்தினி ஆகவே , பாண்டியன் கேடு பெற ,
முத்தாரம் அணிந்த மார்பின் ஒரு முலைமுகத்தைத் திருகி,
நிலைபேருள்ள கூடல் நகர்மேல் எறி ந்து
நெடுந்தீ ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும்
இவள்’ என்றார் சாத்தனார் -
வினை விளையும் காலம் என்றீர்களே
எது அவர்கள் வினையின் விளைவு
என்று இளங்கோ கேட்க
"வீரப்பெருந்தகையே! கேளுங்கள்
குன்றாச்சிறப்புள்ள மதுரை மூதூரில்
கொன்றைமாலை அணிந்த சடைமுடியார்
கோயில் முற்றத்தில் வெள்ளியம்பலத்தில்
நள்ளிரவில் நான் படுத்திருந்தேன்;
அப்போது ஆறாத்துயர் கொண்ட
வீர மாபத்தினி கண்ணகி முன்னர்
மதுரையின் மாதேவி தோன்றி
கொதிக்கும் தணல் சீற்றத்தை
பிய்த்து எறிந்த முலையால் தோற்றுவித்தவளே,
உங்கள் நல்வினைப்பயன் முடிந்தது ;
முந்திய பிறவியில் பைந்தொடியாளே
சிதையாச் சிறப்புள்ள சிங்கபுரத்துச் சங்கமன்
என்னும் வாணிகன் மனைவி உனக்கு
இட்ட சாபம் வந்து கூடியது; எனவே
நீண்டு தழைத்த கூந்தல் உடையோளே!
உன் கணவனைப் பதினான்கு நாள் கடந்து
வானோர் வடிவில் அன்றி இங்குள்ளோர்
வடிவில் காண்பதற்கில்லை என்றது
அக்குற்றமில்லாச் சொற்களை நான் கேட்டேன்
என்றார் சாத்தனார்